Monday, September 24, 2007

சாதிகள் இல்லையடி பாப்பா!

இந்த வாரம் ஆனந்தவிகடன் இதழில் வெளியான கட்டுரை சாதிகளை ஒழிக்க ஒரு வழி சொல்கிறது...

அதாவது, தமிழகத்தைப் பொருத்தவரை மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் அடிப்படையிலேயே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும் என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்" எனப் பரிந்துரைக்கிறது அந்த கட்டுரை...

இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினால் இதுவே சட்டப் பூர்வமாக சாதிகளை ஒழிக்க நாம் எடுக்கும் முதல் அடியாக இருக்கும்... ஆனால் இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்... சாதிகளை வைத்து பிழைப்பு நடத்தும் நம் ஆட்சியாளர்கள் இதற்கு முன் வருவார்களா??

ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை:

"பள்ளிக்கூடங்களில் சாதியைக் குறிப்பிட்டே தீரவேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளது மறுமலர்ச்சிக்கான புதிய திருப்பு முனை!

சாதிகள் பட்டவர்த்தனமாகத் துவங்குவதே, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று உரக்க ஓதப்படும் பள்ளிக்கூடங்களில் இருந்துதான்! இன்றைக்கும் சில கிராமத்துப் பள்ளிகளில் சாதி அடிப்படையிலான சலுகைகளை விநியோகிக்க, மாணவர்களை சாதிப் பெயர் சொல்லி அழைப்பதையும், அவர்கள் கூனிக் குறுகுவதையும் காண முடிகிறது!

தமிழகத்தை எடுத்துக்கொண்டால்... மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் பொறுத்தே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும்" என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்.

இதைச் செய்யும்போது, முதலில் சில அதிர்வுகளும் குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்! ஆனால், சாதி என்ற அடையாளத்தை இழந்தாலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான உரிமைகளையும் சலுகைகளையும் யாரும் இழக்கமாட்டார்கள் என்பதை நடைமுறையில் அரசாங்கம் உறுதியோடு அமல்படுத்திக்காட்டினால்... சாதி ஒரு பொருட்டாகத் தோன்றாமல் போகும்.

சாதி அடையாளத்தைப் பிரதானமாக வைத்திருக்க விரும்புவோரின் மனங்களில் வேண்டுமானால், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ‘சாதி’யை காகிதங்களில் இருந்து அழிப்போம்.

காலத்தின் ஓட்டத்தில் அவரவர் எண்ணங்களில் இருந்தும் ‘சாதி’ அடையாளம் தானாகவே நழுவிப்போகும்... பின், சமத்துவத்தை அணிகலனாக்கி சமுதாயம் மிடுக்கோடு நடைபோடும்!

------------------------------------
ஆனந்த விகடன் (26.09.2007)

Sunday, September 23, 2007

முதலில் ஒழிக்க பட வேண்டியது சாதிகாளா? அல்லது மதங்களா?

நண்பர் ஒருவர் ஓர்குட்டில் கேட்ட வினாவும் அதற்கான எனது பதிலும் என்னை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற இந்த வலைதளத்தை ஆரம்பிக்க தூண்டியது...

அவரது வினா...

முதலில் ஒழிக்க பட வேண்டியது சாதிகாளா? அல்லது மதங்களா??

அவர் அவரது கருத்தை பின்வருமாரு பதிவு செய்திருந்தார்... சாதிகள் ஒழிக்க பட வேண்டியவை தான் ஆனால் அதர்க்கு முன் மதங்கள் ஒழிக்க பட வேண்டும். சாதிகள் இயங்க காரணமே மதங்கள் தான்.மதங்களை ஒழிக்க நாம் ஒன்று பட வேண்டும். சாதிகளை ஒழிக்க வேண்டும்என்று பலர் ஆதரவு கூறுவார்கள் ஆனால் சாதிகள் தோன்ற காரணமே மதங்கள் தான் என்பதைஅனைவரும் மறந்துவிட்டார்கள். மதங்கள் ஒழிக்க குரல் குடுக்க மாட்டார்கள்.

அவரது பார்வையில் மதங்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டுமென தோன்றியிருக்கிறது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. என்னைப் பொருத்தவரை முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதிகளே...

சாதிகள் ஒழிக்கப்பட்டால் மதங்கள் தானாகவே மறைந்துவிடும் என்று கருதுகின்றேன். சாதிகளை ஒழிக்க வேண்டுமெனில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும்...

சுயமரியாதை பேசும் நாம் இன்றும் நம் மதம் (விருப்பம் இல்லாவிட்டாலும்) இந்து மதம் என்றுதானே சாதிச்சான்றிதழில் பயன்படுத்தி வருகின்றோம்... பிறகு இந்து மதத்திற்குள் உள்ள சாதிகளைகளை ஒழிக்காமல் இந்து மதத்தை எவ்வாறு ஒழிப்பதாம்??

நாம் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதனால் நம் மதத்திற்குள் உள்ள சாதிய வேறுபாடுக்ளை ஒழிக்க வேண்டும்...

கடவுள் இல்லை என்று சொல்வதால் சாதிய ஏற்றத்தாழ்வை முழுமையாக ஒழிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பமாக இருக்கட்டும். கடவுளை நம்பாதவர்களுக்கு கோவிலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடவுளை நம்புபவர்களுக்கு அந்த கடவுள் பொதுவானதாக எல்லோராலும் எந்த தடையுமின்றி எளிதில் தரிசிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமல்லவா?? அவர்களின் கடவுள் நம்பிக்கையை முட்டாள்தனம் என்று சொல்வதைவிட அவர்களின் நம்பிக்கைய/கடவுளை தாம் கோவிலினுள்ளே சென்று வழிபடவேண்டும்/பூசை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தை நிறைவேற்றினால் நமக்கு வெற்றி கிட்டும் என நினைக்கிறேன்...

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமென்றால் கடவுளை பாரபட்சமின்றி அனைவரும் வழிபடலாம்/அனைவரும் கோவிலின் கருவரைக்குள் சென்று பூசை செய்யலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்...

சாதிய வேறுபாட்டை உண்மமயிலேயே ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் தனது வீட்டிலிருந்து, தனது ஊரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமேயானால் கண்டிப்பாக நம் வாழ்நாளுக்குள் குறைந்த பட்சம் வேறுபாடற்ற சமூகத்தை நாம் உருவாக்கிவிடலாம். இவ்வாறு சாதிய வேறுபாடுகள் ஒழியும்போது சாதிகள் தானாகவே மறையும். நம் சந்ததிகள் சாதிகளற்ற சமுதாயத்தில் வாழ்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...

இவ்வாறு இந்து மதத்தில் சாதிய வேறுபாடுகள் மறையும்போது அதன் தாக்கம் மற்ற மதங்களிலும் ஏற்படும். ஒவ்வொரு மத்திலும் இவ்வாறானா வேறுபாடுகள் அகற்றப்பட்டால் மதங்களும் மறையும்...

சாதிகளை ஒழிக்கும் வழிமுறைகள் எவை எவ்வாறு அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவது என்பதைப் பற்றி இந்த வலைதளத்தில் எனது கருத்துக்களை பதியலாம் என இந்த வலைதளத்தை துவங்கியுள்ளேன்...

நண்பர்களே! உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்...
சக்தி